பேரையூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
திருமயம் அருகே உள்ள பேரையூர் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நாகநாதசுவாமி உடனுறை பிரகதாம்பாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், திருமண தோச பரிகாரஸ்தலமாகவும் திகழ்ந்து வருகிறது. இக்கோயில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து தினந்தோறும் நாகநாதர் உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் அதனை தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு நாகநாத சுவாமி உடனுறை பிரகதாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு மா, பலா, வாழை போன்ற முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்டது.
முதல் தேரில் நாகநாத சுவாமியும், இரண்டாவது தேரில் பிரகதம்பாளும் வீற்றிருக்க தேரோட்டமானது நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.