"பெரும் தவறு செய்துவிட்டீர்கள்" - ஹிஸ்புல்லா அமைப்புக்கு #BenjaminNetanyahu எச்சரிக்கை!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது, ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்களும், 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனிடையே இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸுக்கு ஆதரவாகவும் அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் லெபனான் பொதுமக்கள் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில், இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 டிரோன்கள் நுழைந்ததாகவும், அதில் 2 டிரோன்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம், மற்றொரு டிரோன் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"என்னையும் எனது மனைவியையும் படுகொலை செய்ய ஹிஸ்புல்லா மேற்கொண்ட முயற்சி ஒரு பெரிய தவறு. இது எதிரிகளுக்கு எதிரான நமது நியாயமான போரைத் தொடர்வதிலிருந்து தடுக்காது. இஸ்ரேல் மக்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க வேண்டும். பயங்கரவாதிகளையும், அவர்களை அனுப்புபவர்களையும் ஒழிப்போம். எங்கள் பிணைக்கைதிகளை காசாவில் இருந்து மீட்டு வருவோம். நமது வடக்கு எல்லையில் வசிக்கும் குடிமக்களை பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம். நமது போர் நோக்கங்கள் அனைத்தையும் அடைய இஸ்ரேல் உறுதியாக உள்ளது."
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிவிட்டுள்ளார்.