பெங்களூரு "ரமேஸ்வரம் கபே" குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் விசாரணையைத் தொடங்கிய NIA!
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் NIA அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் தமிழ்நாட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் வைட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டு வெடித்தது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொது, சந்தேகிக்கப்படும் குற்றவாளி வாடிக்கையாளர் போல ஓட்டலுக்குள் நுழைந்து வெடிகுண்டை வெடிக்க செய்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது.
மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது. இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இதையடுத்து, சந்தேகப்படும் நபரின் படங்களை NIA வெளியிட்டது. குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக கடிதம்: பார் கவுன்சில் தலைவருக்கு எதிராக தீர்மானம்!
இந்நிலையில், குற்றவாளியின் படத்தை NIA அதிகாரிகள் தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர் குறித்த விவரங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பது தொடர்பான உதவியை NIA அதிகாரிகள் விசாரித்துள்ளர். இதையடுத்து, தமிழ்நாட்டில் பெங்களூருவை சேர்ந்த NIA அதிகாரிகள் முகாமிட்டு சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதைபோல, கர்நாடகாவின் அண்டை மாநிலங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடுதலில் NIA அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.