“குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன் முறையாக சேர்வதை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்
பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12-ம் நாள் திறந்து விடப்படுவது மரபு. எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இது மிகுந்த மனவேதனையை தந்தாலும் வேளாண்மை மக்களின் நலனை முன்நிறுத்தி, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் குறுவை சாகுபடியாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி கீழ்க்கண்டவாறு வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூபாய் 3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும். நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.