திடீர் வெள்ளப்பெருக்கால் பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் பெய்த கனமழையால் பழைய குற்றால
அருவி, குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கன மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையிலும் அருவியில் ஆனந்த குளியலிட்டு வந்தனர். இந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்போது போலீசார் தடை விதித்துள்ளனர். இச்சூழலில், ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை தினத்தை கொண்டாட குற்றால அருவிக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் திரும்பி வருகின்றனர்.
மேலும், வெள்ளப்பெருக்கானது குறைந்து தண்ணீர் வரத்து சீரானால் தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.