வங்கதேசம் : ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் புதிய கட்சி தொடக்கம் !
1971 வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. மாணவர்களின் எதிர்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அரசு உத்தரவை உயர்நீதிமன்றம் கடந்த 2024 ஜூலை மாதம் ரத்து செய்தது. அதை எதிர்த்து 'பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் இயக்கம்' என்ற அமைப்பின் தலைமையில் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை ஒடுக்கும் ஷேக் ஹசீனா அரசின் முயற்சியால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது. இருப்பினும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரது இல்லத்தை நோக்கி மாணவர்கள் கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊர்வலமாகச் சென்றனர். இதனால் ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அதைத் தொடர்ந்து நிர்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபர் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், போராட்டம் நடத்திய மாணவர் அமைப்புகள், அந்தப் போராட்டம் நடந்ததற்கான கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தனர். இதற்கு அரசு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்தத் திட்டத்தைக் கைவிட்ட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா, 1972-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வங்கதேச அரசியல் சாசனம் ஜூலை போராட்டக் கொள்கைப் பிரகடனத்தில் செல்லாததாக அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தின் ஒரே நோக்கம், வங்கதேச அரசியல் சாசனத்தை ஒழிப்பதுதான்' என்றார்.
இது, இடைக்கால அரசிலும், வங்கதேச அரசியல் கட்சிகள் இடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில், தாங்களே புதிதாக ஒரு கட்சியை உருவாக்குவதாக பாரபட்சத்துக்கு எதிரான மாணவர் இயக்கம் நேற்று (பிப்.28) அறிவித்தது. தங்களது கட்சிக்கு 'தேசிய குடிமக்கள் கட்சி' எனப் பெயரிடுவதாகவும் தெரிவித்தனர். இதில் நாடு முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.