#Bangladesh முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட் ரத்து!
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த அனைவரின் ராஜாங்க கடவுச்சீட்டுகள் அந்நாட்டின் இடைக்கால அரசு ரத்து செய்தது.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்ததையடுத்து, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் வங்கதேச இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், வழக்கமாக வங்கதேச அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ராஜாங்க கடவுச்சீட்டுகள் அவா்களின் பதவிக் காலம் முடிந்தவுடன் ரத்து செய்யப்படும். அதனடிப்படையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் பிரதமரின் ஆலோசகா்கள், முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள், சமீபத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணை ஆகியோரின் ராஜாங்க கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டன.
வேண்டுமென்றால் குடிமக்களுக்கு வழங்கப்படும் வழக்கமான கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என வங்கதேச உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ராஜாங்க கடவுச்சீட்டு வைத்திருக்கும் வங்கதேச குடிமக்கள் விசா (நுழைவு இசைவு) இல்லாமல் 45 நாட்கள் வரை இந்தியாவில் தங்குவதற்கு இந்திய வெளியுறவுக் கொள்கை அனுமதிக்கிறது.
இதையும் படியுங்கள் : #Sholinganallur ராட்சத குழாய் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீண்! – தகவல் கூறியும் அதிகாரிகள் மெத்தனம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
ஷேக் ஹசீனா ஏற்கெனவே 18 நாட்கள் இந்தியாவில் தங்கியுள்ளார். அவர் மீது, வங்கதேச கலவரம் தொடர்பாக 42 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சேக் ஹசீனாவிடம் ராஜாங்க கடவுச்சீட்டு தவிர, வேறு எந்த கடவுச்சீட்டும் இல்லை. இந்தச் சூழலில், அவருடைய ராஜாங்க கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்படும் சூழல் உருவெடுத்துள்ளது.