“வங்கதேசத்தில் சுதந்திரமாகவோ, நியாயமாகவோ தேர்தல் நடைபெறவில்லை” - அமெரிக்கா
வங்கதேசத்தில் சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நவ்கான்-2 தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டது.
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை முழுமையாக புறக்கணித்தன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 299 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் அவாமி லீக் 222 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
பிரதமர் ஷேக் ஹசீனா, கோபால்கன்ஞ்-3 தொகுதியில் 8-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5-வது முறை வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், இத்தேர்தல் குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் வங்கதேச மக்களுக்கும், அவர்களின் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆனால், இந்தத் தேர்தல் சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் நடைபெற்ற தேர்தல் அல்ல என்பதை மற்ற பார்வையாளர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மேலும், தேர்தல்களின் போதும் மற்றும் அதற்கு முந்தைய மாதங்களில் நடைபெற்ற வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் தேர்தலில் மற்ற கட்சிகள் பங்கேற்காததற்கும் நாங்கள் வருந்துகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
We support the people of Bangladesh and their right to choose their leaders in free and fair elections. We share the view with other observers that these elections were not free or fair, and we condemn violence that took place during elections and in the months leading up to it.
— Matthew Miller (@StateDeptSpox) January 8, 2024