Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Bangalore | கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் - கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு!

08:29 AM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

Advertisement

பெங்களூரு, ஹென்னூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பாபுசாபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரமான், முகமது சாயில், கிருபாள், சோகித் பாஸ்வான், ஆந்திராவைச் சேர்ந்த துளசி ரெட்டி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த புல்வான் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோர் கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். இடிபாடுகளில் இருந்து 14 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், 2 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுவதால், மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு சென்ற முதலமைச்சர் சித்தராமையா, விபத்தில் இறந்த தொழிலாளா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், சம்பவத்துக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து உடல்நலம் குறித்து முதலமைச்சர் சித்தராமையா கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, “கட்டடம் இடிந்து விழுந்த விபத்து மழையால் ஏற்படவில்லை. மாறாக, தரக்குறைவான கட்டுமானப் பணிகளால் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. வருவாய் நிலத்தில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் கட்டடம் கட்டும் பணி நடந்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடிபாடுகளில் சிக்கியிருந்த 8 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 3 பேரின் நிலை மோசமாக உள்ளது. ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை.

இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு கருணைத்தொகை வழங்குவது குறித்து அரசு யோசித்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு ஏற்பாடு செய்யும். கடமையில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி வீடு கட்ட வேண்டும். சட்ட விதிமீறி கட்டப்படும் கட்டுமானங்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும் அனுமதிக்கக் கூடாது என்று மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.

இதனிடையே, கட்டட இடிபாடுகளில் சிக்கி இறந்தவா்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்குவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
building collapseCHIEF MINISTERCompensationKarnatakaNews7TamilReliefSiddaramaiah
Advertisement
Next Article