#Bangalore | கன்னட நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர் மீது 3391 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
பெங்களூருவில் ரசிகர் ரேனுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 17 பேர் மீது 3391 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரேனுகாசாமி கொலை வழக்கை விசாரித்துவரும் காமாட்சி பாலையா போலீசார் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 17 பேரில் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா இருவரையும் முக்கிய குற்றவாளிகளாக சேர்த்து 3991 பக்க குற்ற பத்திரிக்கையை போலீசார் இன்று (செப். 4) பெருநகர கூடுதல் தலைமை நீதிபதியிடம் வழங்கினர்.
குற்றப்பத்திரிக்கை 7 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பவித்ரா கவுடா, தர்ஷன் மீது கடத்தல், கொலை, தடயத்தை அழித்தல், சட்டத்திற்கு புறம்பாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 231 வகையான ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 3 நேரடி சாட்சியம் உட்பட 97 சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்தில் 27 பேர் நேரடி சாட்சியம் அளிக்க உள்ளதாகவும், இந்த வழக்கில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் இரண்டாம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் ஆள் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், மேலும் 3 பேர் தடையத்தை அளிக்க முயன்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
7 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் முதல் பகுதியில் வழக்கின் தன்மையை சுருக்கமாகவும், 2ம் தொகுதியில் 17 குற்றவாளிகளின் வாக்குமூலமும், 3வது தொகுதியில் கொலை சம்பவத்தின் ஆதாரங்களும், 4வது தொகுதியில் பிரேத பரிசோதனை அறிக்கையும், 5வது தொகுதியில் மத்திய மாநில தடையியல் துறையின் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் வழக்கு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் குற்றவாளி தர்ஷனுக்கு நீதிமன்ற காவல் வரும் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.