புதுச்சேரியில் இன்று பந்த்!
புதுச்சேரியில் அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தை, பந்த் ஏஐடியுசி, சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நடத்துகின்றன.
மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்களுக்கு குறந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் இருக்கும் பாப்ஸ்கோ, பாசிக் போன்ற நிறுவனங்களை மீண்டும் திறந்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பந்த் போராட்டம் நடைபெறுகிறது. பந்த் போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் பந்த் தொடங்கியுள்ளது.
பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை. ஒருசில அரசு பேருந்துகள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது. கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.