உ.பி. சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா பயன்படுத்த தடை - மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம்!
உத்திரபிரதேச சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று(மார்ச்.04) அவை கூடுவதற்கு முன்பு அவையின் நுழைவு வாயிலில் விரிக்கப்பட்டிருந்த பச்சை வண்ண கம்பளத்தில் யாரோ பான் மசாலாவை மென்று துப்பியுள்ளதாக சபாநாயகர் சதீஷ் மகானாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த இடத்தை பார்வையிட்ட சபாநாயகர், துப்பரவு பணியாளர்களை அழைத்து சுத்தம் செய்ய சொன்னார். மேலும் இதை செய்த சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்து கம்பளத்தை மாற்ற பணம் பெறப்பட வேண்டும் எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி சமூக வலைத்தளத்தில் பேசுபொருளானது.
அன்றைய தினம் சட்டமன்றத்தில் சபாநாயகர் சதீஷ் மகானா உரையாற்றியபோது, “வீடியோவில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை பார்த்தேன். பெயரை சொல்லி அவமானபடுத்தவில்லை. அவர் நேரில் வந்து என்னை சந்திக்க வேண்டும் இல்லையென்றால் சம்மன் அனுப்பப்படும் என்று கண்டித்தார். மேலும் சட்டமன்றத்தின் மீது 25 கோடி மக்கள் நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளனர் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் சபாநாயகர் தீஷ் மகானா, சட்டமன்ற பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருளை உட்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று நடந்த அவைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, “சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா மற்றும் குட்கா சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறுபவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்டமன்ற விதிமுறைகளின்படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.