‘ஹிஸ்ப் உத் தஹிரிர்’ அமைப்புக்கு தடை - #UnionGovt அறிவிப்பு!
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது மத்திய அரசு.
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பு சமூக வலைதளங்கள் மூலம் பயங்கரவாதத்தை பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பல உலக நாடுகள் தடை செய்திருந்த நிலையில் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
"ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் பிரதமர் மோடி அரசு உறுதியாக உள்ளது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.