பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை... மீறினால் கடும் நடவடிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர்
பள்ளியில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு முகாமில் கலந்து கொண்டு இன்று காலை பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த 4 வயதான ஆருத்ரா என்ற சிறுமி, பள்ளி வளாகத்தில் அலட்சியமாக திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் பள்ளி தாளாளர் திவ்யா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற மழலையர் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆய்வு மேற்கொண்ட பின்னர் பள்ளிக்கு சீல் வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி உயிரிழப்பு சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்ட
ஆட்சித் தலைவர் சங்கீதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நர்சரி & பிரைமரி, தொடக்கப் பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளல் கோடை கால விடுமுறை நாட்களில் கண்டிப்பான முறையில் செயல்படக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
கோடைகால விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் உட்பட எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக்குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.