4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான குளிர் எதிர்ப்பு மருந்துக்கு தடை!
4 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு மருந்தை கொடுப்பதற்கு இந்திய மருந்து ஒழுங்கு ஆணையம் தடை விதித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்துகளால், காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கேமரூன் ஆகிய நாடுகள் உட்பட உலகளவில் 141 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 2019 முதல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான இருமல் மற்றும் சளி எதிர்ப்பு மருந்துகள் இந்த சர்ச்சையில் சிக்கின. இந்தியாவைப் பொறுத்த வரையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இவ்வகை மருந்துகளால், குறைந்தது 12 குழந்தைகள் உயிரிழந்தும், நான்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலையான மருந்து கலவையில் குளோர்பெனிரமைன் மெலேட் மற்றும் ஃபைனிலெஃப்ரின் ஆகியவை அடங்கும். இது சாதாரண சளி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க சிரப்புகள் அல்லது மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து 4 வயது குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமலுக்கான எதிர்ப்பு மருந்தை வழங்க இந்தியாவின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தடைவிதித்துள்ளது.
குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்படாத சளி-எதிர்ப்பு மருந்து கலவைகளை வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் ஒரு விவாதத்தைத் தூண்டியதாகவும், அதன் விளைவாக நான்கு வயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகள் இக்கலவையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.