தேசிய சிறந்த வடிவமைப்பாளர் விருது: காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளார் தேர்வு!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலசுப்பிரமணியன் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முத்தீஸ்வரர் சந்நிதி தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(54). இவர் காஞ்சிபுரத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். நிகழாண்டுக்கான மத்திய அரசு வழங்கும் சிறந்த வடிவமைப்பாளருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் இவருக்கு மத்திய அரசின் சார்பில் தாமிர பட்டயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியன வழங்கப்படவுள்ளன. தமிழ்நாட்டிற்கும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாவது :
"காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் கூட்டுறவு கைத்தறி சங்கமும், மத்திய அரசின் நெசவாளர் சேவை மையமும் இணைந்து நான் தொடா்ந்து 25 நாட்களுக்கும் மேலாக தயாரித்த கோர்வைப் புடவையை விருதுக்கான தேர்வுக்கு அனுப்பி வைத்தனர். என்னைப் போல 18 பேர் தயாரித்த சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டதில் எனது பட்டுச்சேலைக்கு விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது.
இதையும் படியுங்கள் : ஆந்திர கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் – ரூ.4லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சென்னை வியாபாரி!
எனது தயாரிப்பில் காஞ்சிபுரத்தின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் சேலையின் உடல் கலரானது பேபி பிங்க் கலரிலும், சேலை முந்தி பெரிய கரையாகவும் அதில் யானை, மயில், சக்கரம் மற்றும் தாழம்பு இழை போன்ற அம்சங்களை சேர்த்து தயாரித்ததால் எனக்கு விருது கிடைத்திருக்கிறது. கடந்த 2015- ஆம் ஆண்டு எனது மனைவி பத்மாவுக்கு இதே போன்ற தேசிய விருது கிடைத்தது"
இவ்வாறு பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.