அமலாக்கத்துறை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்!
மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராகாதது தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, கடந்த ஆண்டு அவரை கைது செய்தது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்து வந்தார். சுமார் 6 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது.இந்த வழக்கை எடுத்துக் கொண்ட நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் கடந்த மாதம் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். அப்போது, மார்ச் முதல் வாரம் வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருப்பதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படியுங்கள் : கேசிஆர் மகள் கவிதா கைது எதிரொலி - தெலங்கானாவில் இன்று முழு அடைப்பு!
அதன்படி அமலாக்கத்துறை சம்மனுக்கு நேரில் ஆஜராகாது தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. ரூ.15,000 பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்தி அரவிந்த கெஜ்ரிவால் ஜாமின் பெற்றுள்ளார்.