”பேட் கேர்ள் படத்தை கருணையுடன் அணுக வேண்டும்”- இயக்குனர் மிஷ்கின்!
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பேட் கேர்ள். இப்படத்தில் அஞ்சலி சிவராமன், சரண்யா ரவிச்சந்திரன், சாந்திபிரியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் பேட்கேர்ள் பட முன்னோட்ட விழாவில் நடைபெற்றுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர் மிஷ்கின்.
அப்போது பேசிய அவர்,
”எந்த ஒரு கலைப்படைப்பும் சமூகத்தில் இருந்து உருவாகிறது. ஆனால் சமூகம் அந்த கலைப்படைப்புகளை பார்த்து இது, சமூகத்தை கெடுக்கிறது என்கிறார்கள். இது இரண்டுமே நடக்கிறது. சில படைப்பு கெடுக்கிறது, சில படைப்பு சிந்திக்க வைக்கிறது. நாம் பிஸியாக இருக்கும்போது கொஞ்சம் சிந்திக்க வைத்தால் அது நல்ல படைப்பு நம் வாழ்வை மறக்க வைப்பது தான் கலைப்படைப்பின் சிறப்பு. நம் சித்தாந்தங்களை ஒரு கலை படைப்பு கேள்வி கேட்கும்போது நமக்கு கோபம் வருகிறது. அந்த கோபம் நியாயம் ஆனது.
இந்த 100 வருட சினிமாவை உற்று நோக்கினால். சல்லடையில் போட்டு எத்தனை நல்ல படங்கள் உள்ளன. நாம் எத்தனை மோசமான படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆகவே விமர்சனம் என்பது ஊசியால் குத்துவதை போல் இருக்க வேண்டும். அது படைப்பாளியின் தலையை துண்டிக்க கூடாது. பேட் கேர்ள் படம் 50 சதவீதம்பேருக்கு பிடிக்கும். 50 சதவீதம்பேருக்கு பிடிக்காது. அதுதான் படைப்பு. ஒரு படைப்பு 100 சதவீதம் நல்லா இருக்கும் என்றால், அதில் உண்மையில்லை என அர்த்தம். 100 சதவீதம் நல்லா இல்லை என்றால், அது சரியாக இல்லை என அர்த்தம். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த சினிமாவுக்குள் பெண்கள் வரும்போது மகிழ்ச்சியாக உள்ளது.பேட் கேர்ள் படத்தை கருணையோடு அணுக வேண்டும் . இந்த படம் பார்த்துவிட்டு வந்து வர்ஷாவை கொஞ்சமாக திட்டுங்கள். குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க முடியாத எத்தனை படத்தை நாம் பார்த்திருக்கிறோம். சாக்கடை படைப்புகளுக்கு இடையே இந்த படம் ஒரு சந்தனகட்டை.வருங்காலத்தில் வர்ஷா ஆஸ்கர் விருது வாங்கலாம். தேசியவிருது பெறலாம். எல்லாருக்கும் முதல் படைப்பு சுமாராகதான், சவலைபிள்ளையாக வரும். எதுக்கு பார்த்தோம்னு தெரியாமல் பல படங்களை பார்க்கிறோம். அதில் இது நல்ல படைப்பு.
வாடி வாசலை எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். சூர்யா ஒரு அழகன் - வெற்றி ஒரு அறிவாளி. அழகும் அறிவும் இணைந்து உருவாகும் அந்த படம் சிறந்த படைப்பாக இருக்கும். விரைவில் வாடிவாசல் படத்தை தொடங்க வேண்டும் என வெற்றிமாறனை கேட்டுக் கொள்கிறேன். அது நடந்தால் இருவரின் சிறந்த படமாக அது அமையும்”
என மிஷ்கின் பேசினார்.