மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் - சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!
மஜக பேரிடர் மீட்புக்குழுவில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவு மற்றும் மற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி பழவேற்காடு பகுதி மசூதி நிர்வாகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழு கடந்த 6 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் 100 பேர் என்ற அளவில் தொடங்கி 200 பேர் வரை அடுத்தடுத்து களப்பணிகளில் இணைந்தனர்.
இதனிடையே திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிகளில் நிவாரணப்பணிக்கு 22 பேர் கொண்ட மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண குழு சென்றது. அப்போது நிவாரணக்குழு உறுப்பினர்களுக்கு அங்கு அமைந்துள்ள மசூதி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நிவாரணக்குழுவுக்கு மதிய உணவு அளித்தனர். அச்சமயத்தில் மஜக நிவாரணக்குழுவில், ஐயப்ப மலைக்கு மாலை போட்டிருந்த 3 பேரும் அதில் இருந்தனர்.
அவர்களது உணர்வுகளை மதித்து, நிவாரணக்குழுவை சேர்ந்தவர்கள் சைவ உணவளித்து உபசரித்தனர். இதை மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி சுட்டிக்காட்டி இத்தகைய பண்புகள்தான் நமது மண்ணுக்கு அழகு என்று பாராட்டினார். மேலும் உணவு கொடுக்க வந்த எங்களுக்கு உணவு கொடுத்து உபசரித்ததற்கு நன்றி என கூறினார். பிறகு அந்த பகுதியில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த புராதான கருங்கல் பள்ளியை பார்வையிட்டார். இங்கு எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ்வதும், உறுதுணையாக இருப்பதும் இந்த புயல் நிவாரணப்பணிகளிலும் பார்க்க முடிந்தது.”