"70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்" - மத்திய சுகாதார அமைச்சகம்!
இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இணைவதை ஊக்குவிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
'ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு' திட்டத்தில் பலனடைய விரும்பும் மூத்த குடிமக்கள் ‘ஆயுஷ்மான் செயலி’ மற்றும் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள வலைதளம் மூலம் மட்டுமே தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் தகுதியுடைய அனைத்து குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படும். இந்த முன்னெடுப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சமூக மற்றும் பொருளாதார நிலைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படவுள்ளது. ஆதார் ஆவணம் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய போதுமானது. முன்னதாக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிற காப்பீடு திட்டங்களில் இணைந்தவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டம் அல்லது ஏற்கெனவே பயன்பெற்று வரும் திட்டம் இரண்டில் ஏதெனும் ஒன்றை தேர்வு செய்ய ஒருமுறை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் : புரட்டாசி மாத பிரதோஷம், அமாவாசை | #Sathuragiri கோயிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி!
ஏற்கெனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ள குடும்பத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களின் சிகிச்சைக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கான காப்பீடு தொகையை முழுமையாக அல்லது பகுதியாக பயன்படுத்தியிருந்தாலும் இந்த விதி அவர்களுக்கு பொருந்தும். அதேபோல மூத்த குடிமக்கள் தங்கள் குடும்பத்துக்கென வழங்கிய காப்பீடு தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தியிருந்தால் குடும்பத்தில் உள்ள பிற நபா்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களை இணைப்பதற்கான நிர்வாக செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளவுள்ளன. எனவே, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் குறித்து 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இந்த திட்டத்தில் சேர்க்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.