ஆயுஷ், ஜடேஜா போராட்டம் வீண்... சென்னையை வீழ்த்தி பெங்களூரு த்ரில் வெற்றி!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். இதில் ஜேக்கப் பெத்தேல் 55 ரன்களிலும், விராட் கோலி 62 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 17 ரன்களில் வெளியேறினார். பின்பு ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியின் ஷெப்பர்ட் 53 ரன்களுடன் களத்தில் இருந்தார். சென்னை அணியில் அதிகபட்சமாக மதீஷா பதிரானா 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 214 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கியது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரே - ஷேக் ரஷித் களமிறங்கினர். ஷேக் ரஷித் 11 ரன்னிலும், அடுத்து வந்த சாம் கரன் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆயுஷ் மாத்ரே 94 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த டிவேன் பிரேவிஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சென்னை அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜடேஜா 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.