அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா: உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாட்டம்!
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தங்கள் நாடுகளில் எப்படி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை காணலாம்...
அயோத்தியில் ராமர் கோயில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இன்று நடைபெறவுள்ள பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் அளவற்ற உற்சாகத்தை வெளிப்படுத்தி, மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடத் தொடங்கியுள்ளனர். நியூயார்க் நகரத்தில், புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், இந்தியர்கள் பெரிய ராமர் படங்களால் ஒளிரச் செய்துள்ளனர். இந்த விழாவைக் கொண்டாட அமெரிக்கா முழுவதும் பல நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவில் விழா நடைபெறும் அதே நேரத்தில் வாஷிங்டன், டி.சி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் வரிசையாக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. டெக்சாஸ், இல்லினாய்ஸ், நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் ஜார்ஜியா போன்ற மாநிலங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. விஎச்பி, அமெரிக்கா முழுவதிலும் உள்ள இந்துக்களுடன் இணைந்து, 10 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், அமெரிக்கா முழுவதும் உள்ள இந்து-அமெரிக்க சமூகத்தினர் பலர் கார் பேரணிகளை ஏற்பாடு செய்து, பிரதிஷ்டை நிகழ்வுக்கு முன்னதாக பல நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். மொரிஷியஸில், புலம்பெயர்ந்த இந்தியர்கள் கோயில்களில் விளக்குகளை ஏற்றி, ராமாயணத்தை ஓதுகிறார்கள். இது ராமருக்கு அளிக்கப்படும் மரியாதை என்று கூறப்படுகிறது.
மொரிஷியஸ் அரசாங்கம் இன்று (ஜன. 22) இந்து மதத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு இரண்டு மணிநேர சிறப்பு விடுமுறையை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களும் லண்டனில் கார் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். பேரணியின் போது, பங்கேற்பாளர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்களை எழுப்பினர். ராமரைப் புகழ்ந்து பாடல்களை இசைத்தனர்.
ஆஸ்திரேலியாவில், ராமர் கோயில் நிகழ்வில் அதிகரித்து வரும் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான கோயில்களில் தொடர் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. சிட்னியில், இந்திய புலம்பெயர்ந்தோர் நேற்று முன்தினம் கார் பேரணியை ஏற்பாடு செய்து விழாவைக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றனர்.