"அயோத்தியில் ஏழைகளின் நிலங்கள் பறிப்பு" - #SamajwadiParty குற்றச்சாட்டு!
அயோத்தியில் பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடன் சிலர் ஆக்கிரமித்து வருவதாக சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களின் நிலங்களை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவுடனும், பாதுகாப்புடனும் தொழிலதிபர்கள் ஆக்கிரமித்து வருவதாக சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், நிலத்தை ஆக்கிரமிப்பதற்காக அவர்கள் விவசாயிகளை தாக்குவதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் கேட்டால், எந்தவித புகாரும் வரவில்லை என்று பொய் கூறுவதாகவும் சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின்பேரில் தனியார் நிறுவனம் ஒன்று பாதுகாப்புடன் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருகின்றது. ராமர் கோயில் தீர்ப்புக்குப் பிறகு, அயோத்தி சொத்துக் குவிப்புக்கான பகுதியாக மாறிவிட்டது. பாஜக, முதலமைச்சர் யோகி, தொழிலதிபர்கள் அனைவரும் நிலத்தை ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள். அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் விவசாயிகளை அடித்து துன்புறுத்தினர். அதனுடன், முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாயிகள் சிறைக்கு அனுப்பபட்டுளளனர்" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான வீடியோக்களும் பகிரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “அயோத்தியில் விவசாயிகள் காவலில் வைக்கப்பட்டு, பணக்காரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. உபி அரசு இன்னும் ஆட்சியில் இருக்கிறதா? அல்லது ஓய்வு பெற்றுவிட்டதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில், சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டிய தனியார் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "விவசாயி ஒருவர் அந்த நிலத்தை எங்கள் நிறுவனத்துக்கு விற்றார். அந்த நிலத்தை கையகப்படுத்த சென்றபோது சிலர் எங்கள் ஊழியர்களை தாக்கினர். இதில் எங்கள் ஊழியர் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புகாரும் அளித்துள்ளோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அயோத்தி காவல் கண்காணிப்பாளர் ராஜ் கரண் கூறுகையில், “ புகாரின் மீது அயோத்தி காவல் ஆய்வாளரால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது” என தெரிவித்துள்ளார்.