For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் ஜன.11, 12 தேதிகளில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழா! நிகழ்ச்சி நிரல் என்ன? முழுவிபரம் இதோ!

05:46 PM Jan 10, 2024 IST | Web Editor
சென்னையில் ஜன 11  12 தேதிகளில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழா  நிகழ்ச்சி நிரல் என்ன  முழுவிபரம் இதோ
Advertisement

அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், நிகழ்ச்சி நிரல்கள் என்னென்ன என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ளது.  

Advertisement

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது. நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அயல்நாடுகளில் வாழும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்பதற்குப் பதிவுகள் செய்துள்ளனர். இதில், 218 சர்வதேசச் தமிழ் சங்கங்கள் 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள். இந்த இரண்டு நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.

முதல் நாளான ஜனவரி 11 அன்று, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார். அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளைத் திறந்து வைக்கிறார். மேலும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டுச் சிறப்பு நேர்வாக அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்களும் ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல் அமர்வாக நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தமிழின் தொன்மை - தொடர்ச்சி குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தலைமையில், சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை -தொலைநோக்குச் சிந்தனையும் செயலும் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.

பின்பு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி தலைமையில் அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு முன்னெடுத்துச் செயல்படுத்தும் திட்டங்களான அயலகத் தமிழர்களுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டை, காப்பீடு வசதி, திருமண உதவித் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் குறித்த விவரங்களும், சிறப்புக் கலந்துரையாடலும் நடைபெறும்.

அடுத்தடுத்த நிகழ்வுகளாக தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ஒளிரும் எதிர்காலம் வாய்ப்புகளும் சவால்களும் என்ற - தலைப்பிலும், தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் வணிகத்தில் தமிழர்கள் - வாய்ப்பும் வளர்ச்சியும் என்ற தலைப்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் நாளான ஜனவரி 12-ம் தேதி விழாப்பேருரை நிகழ்த்துவதுடன் எனது கிராமம்' என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.கா.சண்முகம் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முக்கிய நிகழ்வாக 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.

முதலமைச்சர் தமிழ் இலக்கியம், கல்வி. சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள். முதல் நாளின் தொடர்ச்சியாக இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெறும். ஐந்தாவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தமிழ் மொழி வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு குறித்த அமர்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

அயலகத்தில் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல் குறித்த விவாத அமர்வு பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெறுகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு நாள்களிலும் நாட்டுப்புற இயல், இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் குறிப்பாக தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ்-ன் நடன நிகழ்ச்சியும் அரங்கேற உள்ளன.

தமிழர் மரபு மற்றும் பண்பாடுகளை விளக்கும் வகையில் தமிழர் நலன், தமிழர் கலை பண்பாடு, வணிகம், தமிழின் தொன்மை, தொடர்ச்சி. சர்வதேசத் தமிழ்ச் சங்கம் என்னும் கருப்பொருள்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாரியாகக் கண்காட்சி அரங்குகள்
தமிழர் கலை பண்பாடு மற்றும் வணிகத்தை விளக்கும் அரங்குகளும், தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் தொல்லியல் துறை, தமிழ் இணையக் கழகம், இலங்கை தமிழ்க் கலை கண்காட்சி, அரங்குகளும், சர்வதேசத் தமிழ்ச் சங்கங்கள் கண்டங்கள் வாரியான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், முதலமைச்சரின் கனவுத்திட்டமான "நான் முதல்வன்" திட்டம் மற்றும் சிப்காட், வழிகாட்டி (கைடன்ஸ்), டிட்கோ, சிட்கோ உள்ளிட்ட துறைகளின் காட்சி அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் பூம்புகார், தமிழ் வளர்ச்சித் துறை, கோ ஆப்டெக்ஸ், அயலக நலத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் காட்சி அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.

வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்கு முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை குறித்து விளக்குவதற்காக ஸ்டார்ட் அப், டிஎன் ஃபேம் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது.

இக்கண்காட்சி அரங்குகளைக் காண்பதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயலகத் தமிழர் நலன் கருதி ஆற்றிவரும் அரும்பணிகளையும் அயலகத் தமிழர் தாய்த் தமிழ் நாட்டின் மீது கொண்டுள்ள ஈடுபாடுகளையும் பொதுமக்கள் அறிந்து மகிழும் வாய்ப்புகள் ஏற்படும்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்புரை ஆற்றுகிறார்.

Tags :
Advertisement