2025-ஆம் ஆண்டிற்கான விருதுகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான விருதுகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அவ்வகையில், இந்த ஆண்டு திருவள்ளுவர் திருநாள் விருதுகளுக்கான விருதாளர்கள் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.
அய்யன் திருவள்ளுவர் விருது
திருக்குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் ஒருவரைத் தெரிவு செய்து திருவள்ளுவர் விருது 1986ஆம் ஆண்டு முதல் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 39 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். அவ்வரிசையில் 2025ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு "திருக்குறள் என்பதை கற்பது, கற்பிப்பது என்று மட்டும் இருந்துவிடாமல் அதனை வாழ்வியல் நெறியாகக் கொள்தல் வேண்டும்; குறள் காட்டும் வழியில் நாம் வாழ்தல் வேண்டும்; பிறருக்கு வழிகாட்ட வேண்டும்; வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து இன்பத் துன்ப நிகழ்வுகளையும் குறளாயத் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்; குறள் வழி குடியரசு அமைப்போம் ஆகிய கொள்கையைக் கொண்டு செயலாற்றிவரும் புலவர் மு. படிக்கராமு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா விருது
தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு பேரறிஞர் அண்ணா விருது 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 18 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "திராவிட இயக்கக் குடும்பத்தில் பிறந்து பேச்சுக்கு இணையாக எழுத்தையும் ஆயுதமாகக் கொண்டவரும், எளிய விவசாய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவரும், சட்டம் பயின்று சுதந்திர இந்தியாவை அதிரவைத்த மாணவர் போராட்டமான இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்தவரும் மாணவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே பாலமாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவரும் அண்ணாவை தலைவராகவும் திராவிட சித்தாந்தத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டவரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவருமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் பிறந்த எல். கணேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
https://x.com/news7tamil/status/1875589749983117350
மகாகவி பாரதியார் விருது
பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர் பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997ஆம் ஆண்டு முதல் வழங்கப் பெற்று வருகிறது. இதுகாறும் 27 அறிஞர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "படிக்கட்டெல்லாம் பைந்தமிழ்ப் பாடும் பச்சையப்பர் ஆடவர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை முதுகலை பயின்று கல்லூரி காலங்களிலேயே அனைத்து கவிதை போட்டிகளிலும் முதலிடம் பெற்று தமிழ் உலகமே பாராட்டிய கவிஞர் திலகமாகவும் திரைப்படங்களின் வாயிலாக இளைஞர்கள் உலகத்தில் மாபெரும் எழுச்சியையும் மகிழ்ச்சியையும் தன் திரை வரிகளால் உள்ளங்கவர் கவிஞராக பீடு நடை போடும் கவிஞர் கபிலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது
தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது 1978ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பாவேந்தர் நூற்றாண்டு தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாவில் வழங்கப்பட்ட விருதுகளோடு சேர்த்து இதுகாறும் 88 அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "கல்லூரி மாணவராய் விளங்கியபோதே கவிதை நூல் வெளியிட்டவரும் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மற்றும் கவியரசு கண்ணதாசன் ஆகியோரின் பாராட்டுகளோடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் பாராட்டப் பெற்றவருமான பொன். செல்வகணபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது
சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 1979ஆம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. இதுகாறும் 45 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "பள்ளிப் படிப்பு முதற்கொண்டே பொதுவாழ்வு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டிவருபவரும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தை நிறுவி, அவ்வமைப்பின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவரும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, பல்வேறு நாளிதழ்களிலும், இதழ்களிலும் சமூகப் பொருளாதார அரசியல் கருத்துக்களை குறித்தும், மருத்துவ அறிவியல் பொருண்மைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளையும், பல்வேறு தலைப்புகளில் குறுநூல்களையும் எழுதியவருமான மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
சிறந்த தமிழறிஞர் ஒருவருக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது 2000ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 22 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "தமிழ் மாணவர் கழகம், திராவிட மாணவர் கழகம், தமிழிசை இயக்கம், தமிழியக்கம், பகுத்தறிவாளர் கழகம், கைலாசபதி இலக்கிய வட்டம், ஓர்மை, இலக்கு ஆகிய இயக்கங்களில் பணியாற்றிய வே.மு.பொதியவெற்பன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்.
தந்தை பெரியார் விருது
சமூக நீதி கிடைக்க பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 29 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் சம்பந்தமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் மந்திரமா? தந்திரமா? போன்ற பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பற்றி அதிகம் பேசவும் எழுதவும் தொடங்கியவரும் பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவரும் 1970ல் ஆசிரியர் என்று அழைக்கப்படும் கி.வீரமணியின் வழிகாட்டுதலோடு விடுதலை உண்மை ஆகிய இதழின் விநியோகப் பணியில் ஈடுபட்டவருமான ராஜேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் விருது
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுகாறும் 26 அறிஞர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு "எழுத்தாளர், வழக்கறிஞர் அரசியல்வாதி மற்றும் சாதி எதிர்ப்பு ஆர்வலர் என பன்முகங்களில் இயங்கி வருபவரும் அம்பேத்கார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவரும் நிறப்பிரிகை மற்றும் மணற்கேணி இதழ்களின் ஆசிரியராகத் திகழ்ந்தவரும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவரும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் பிறந்தவருமான நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தந்தை பெரியார் விருது மற்றும் அண்ணல் அம்பேத்கர் விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் விருது
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் "முத்தமிழறிஞர் கலைஞர் விருது" 2024இல் தோற்றுவிக்கப்பட்டது. முதன் முறையாக இவ்விருக்கு " மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவரும் மைசூர், இந்திய மொழிகள் நிறுவனத்தில் பணியாற்றியவரும் தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனப் பணிகளில் தொண்டாற்றியவரும் வயது வந்தோர் கல்வித் துறையின் திங்களிதழில் பணியாற்றியவரும், கலைஞர் செதுக்கிய தமிழகம், தியாகிகளைப் போற்றிய தியாகச்சீலர் கலைஞர். காவிரி நீர்ப் போரில் கலைஞரும் தளபதியும் ஆகிய நூல்களை எழுதியவருமான முத்து வாவாசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முத்தமிழறிஞர் கலைஞர் விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூபாய் பத்து லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளன"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.