For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம் - 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு!

04:16 PM Jan 14, 2024 IST | Web Editor
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரம்   1000 காளைகள்  600 மாடுபிடி வீரர்கள் தேர்வு
Advertisement

நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு, 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை. அந்த வகையில், இந்தாண்டு ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டிக்கான வேலைபாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காலை 7 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

1. போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி வரை அனுமதி வழங்கப்படும்.

2. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதி சீட்டுடன் வந்தால் மட்டுமே அனுமதி.

3. காளைகளின் உரிமையாளரும், அவருடன் வரும் உதவியாளரும் மதுபோதையில் இருக்க கூடாது.

4. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மது போதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும்.

5. காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிற்றை அறுப்பதற்காக, கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களோ கொண்டுவரக்கூடாது.

6. ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதிச்சான்று கொண்டுவரவேண்டும்.

7. ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குள் காளைகள், உரிமையாளர்கள், அவருக்கு உதவியாக ஒருநபர் மட்டும் வரிசையில் நிற்க அனுமதி.

8. ஜல்லிக்கட்டு காளைகளின் மூக்கணாங்கயிறுகளை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படுவார்கள்.

9. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி.

10. ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கும்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

11. அனுமதி பெற்ற காளைகள், உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement