பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்து செம்மர தூண் திருட்டு - ஆவடியில் பரபரப்பு!
சென்னையை அடுத்த ஆவடியில் பட்டப்பகலில் வீடு புகுந்து பழைய காலத்து செம்மர தூணை திருடி சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ஆவடி அண்ணாமலை நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (43). இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவர் வீட்டின் பின்பக்கம் 150 ஆண்டு பழைய காலத்து வீடு ஒன்று உள்ளது. இவர் முன்புறம் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பின்புறம் உள்ள பழைய வீட்டில் இவரது தந்தை துரை (80) வசித்து வருகிறார். அவர் தனது மகன் ஆறுமுகம் வீட்டில் மதிய உணவருந்த சென்றார். இந்த நிலையில் அவர் பின்பக்க வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர் அந்த அறையில் இருந்த ஒரு செம்மரக்கட்டை தூணை பியர்த்து எடுத்துச் சென்றார்.
இதையும் படியுங்கள்: “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதல் வேலையாக சாதிவாரி கணக்கெடுப்பு” – ராகுல் காந்தி
துரை உணவு அருந்திவிட்டு பின் பக்க வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த அறையில் இருந்த ஒரு செம்மரக்கட்டை தூண் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த ஆறுமுகம் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அந்த வீட்டின் முன்பு இருந்த சிசிடிவியை ஆராய்ந்து பார்த்தனர்.
அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு ஒருவர் மட்டும் உள்ளே சென்று நோட்டமிட்டார். பின்னர் உடனிருந்தவரை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்திவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்குள் சென்றார். பின்னர் 6 அடி நீளம் 25 கிலோ எடை கொண்ட பழைய காலத்து செம்மரக்கட்டை தூணை இருசக்கர வாகனத்தில் திருடி சென்றனர். இந்த காட்சி முழுவதும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சியை வைத்து ஆவடி காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.