டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு - வெளியானது முக்கிய அறிவிப்பாணை!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் மூலம் அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான புதிய பாடத்திட்டம் சமீபத்தில் மாற்றப்பட்டது. இந்த புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று(ஏப்ரல்.01) வெளியிட்டுள்ளது . இந்த தேர்வின்மூலம் தமிழ்நாடு அரசு வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்பி வருகிறது.
தற்போது வெளியாகியிருக்கும் குரூப் 1 அறிவிப்பாணையின்படி, மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 7 காலியிடங்கள், வணிக வரி உதவி ஆணையர் பணியிடத்துக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் வருகிற 30 ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என் 3 நிலைகளில் நடைபெறும் இத்தேர்வினை https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.