பக்தர்கள் கவனத்திற்கு | சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் கனமழை எச்சரிக்கை!!
சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.
இந்த சூழலில் கேரளாவில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தற்போது தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பருவமழை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது.
அதனை தொடர்ந்து, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம் , வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருவனந்தபுரத்தில் பொன்முடி போன்ற மலையோர மற்றும் நீர் வீழ்ச்சி சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. கனமழையால் பக்தர்கள் கடும் குளிர் மற்றும் சிரமத்தை சந்தித்தாலும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக வரும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பக்தர்கள் பயணிக்கும் வழியில் மண்சரிவோ அல்லது பேரிடர் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ, அவரச கட்டுப்பாட்டு மையத்திற்கோ தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.