"அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி" - சீதாராம் யெச்சூரி!
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிகள் நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தவிர எதிர்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மூலவர் பிரதிஷ்டை விழா நடைபெறும் அதே நாளில் திரிணமூல் காங்கிரஸ் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட தலைவர்களுடன் நட்பு பேரணியை ஒருங்கிணைக்கவுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஜோதி பாசுவின் 15-வது நினைவு நாள் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
"ஒவ்வொரு கட்சிக்கும் சமூக நல்லிணக்கத்தைப் பேண அவர்களின் சுய பிராசாரத்தை மேற்கொள்ள உரிமை உண்டு.
இதையும் படியுங்கள்: திமுக இளைஞரணி மாநாடு – சுடர் ஓட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஆனால் அந்த முயற்சியில் வகுப்புவாதமோ, பிரிவினைவாதமோ இடம்பெறக் கூடாது. மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளைத் திணற செய்ய பயன்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. அயோத்தி ராமர் மூலவர் பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கிறது.
மத அடிப்படையில் அரசியலில், கட்சிகள் ஈடுபடக் கூடாது. மத நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு கட்சியும் உழைக்க வேண்டும். பாஜக இந்த விழாவை உண்மையான சுதந்திரம் நிறைவேறிய கனவு என குறிப்பிடுகின்றனர்.
இது சுதந்திர போராட்டம், வீரர்களின் தியாகம் ஆகியவற்றை மறுக்கும் வகையிலான கருத்து. தேசத்தின் தலைவர்களையும் அவர்களின் கூட்டுமுடிவான பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்துக்கும் எதிரான முடிவு."
இவ்வாறு அவர் கூறினார்.