லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறி... புதுவை ரவுடி கடலூரில் என்கவுண்டர்!
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் மொட்டை விஜய் என்ற பிரபல ரவுடி. இவர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் லாரிகளில் இருந்த ஓட்டுநர்களை வெட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் இன்று இவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
எம்.புதூர் பகுதியில் விஜய் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் சென்று மொட்டை விஜய்யை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது வீச்சருவாளால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். காயமடைந்த கோபி மற்றும் கணபதி ஆகிய இரண்டு போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே போலீசார் தற்காப்புக்காக விஜய்யை என்கவுண்டர் செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டை விஜய்யின் உடலும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.