ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்... பாதுகாப்பை உறுதி செய்ததாக தமிழ்நாடு அரசு தகவல்!
ராஜஸ்தானில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் இந்திய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழங்களுக்கு இடையேயான இந்த விளையாட்டு போட்டி, தனியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ஆர்.எம், வேல்ஸ் யுனிவர்சிட்டி பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தென் இந்தியாவில் இருந்து 4 அணிகள் சென்றனர்.
இந்நிலையில் போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பிய போது, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிகளை காண பிரபல நடிகர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையிலையே வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர்.
அதுவும் இருக்கைகளை கொண்டு தாக்கியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த நபரையும் தாக்கி, தமிழ்நாடு திரும்பிச் செல்லுங்கள் என திட்டியதாக வாய்ஸ் ரெக்கார்டை தமிழக வீரர்கள் பகிர்ந்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் நடந்த உடன் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து, அவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் சுமூகமாக பங்கேற்றதாகவும், இன்று தமிழ்நாடு திரும்புவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் உள்ளோம், மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.