For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் - பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மமக வலியுறுத்தல்

10:06 AM Jan 25, 2024 IST | Jeni
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல்   பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மமக வலியுறுத்தல்
Advertisement

பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அவர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் அளித்தும் காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்காதது கண்டனத்திற்குரியது.

நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன். செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement