நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் - சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.
தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.
இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்களும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றமும் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.