அன்புவின் அட்ராசிட்டி - 'பறந்து போ' திரை விமர்சனம்!
உலகின் பல பகுதிகளில் திரைப்பட விழாக்களை முடித்துவிட்டு வெள்ளித்திரைக்கு பறந்து வந்திருக்கிறது இயக்குநர் ராமின் " பறந்து போ " திரைப்படம். நகரத்தின் சிக்கலான கட்டடங்கள், சின்ன சின்ன ஏரிகள், குறைவான மரங்கள் என்கிற பருந்து காட்சியிலிருந்து திரைப்படம் தொடங்குகிறது. படத்தில் ‘கோகுல், குளோரி, ஜென்னா இவங்க மூன்று பேரையும் இணைக்கிறது நம்ம அன்புதான்’ அப்படிங்கிற வடசென்னை திரைப்படத்தின் வசனம் போல அன்பு எனும் மிதுல் ரயான் தனது சுட்டித் தனமான மற்றும் சோர்ந்து போகாத ஒரு மழலையாக பறந்து கொண்டே இருக்கிறார்.
நகரம், காஸ்ட்லியான கல்வி, போட்டி உலகம், கடன், இஎம்ஐ இவற்றிலிருந்து சாதிக்க துடிக்கிற மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் கோகுல் - குளோரி . தனது எண்ணெய் தொழிலை முன்னேற்ற வேண்டும் எனவும், தனது சேலைக் கடையை சிறப்பாக நடத்தி அதன் மூலம் தானும் குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் எனவும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் அப்பாவும் - அம்மாவும். இந்த இரண்டு பேரின் ஓட்டத்தில் மகன் அன்பு அடைபட்ட வீட்டுக்குள் வீடியோ கேம், ஆங்கில படங்கள், பீட்சா, BTS பாடல்கள் என தனிமையில் கழிக்கிறான்.
அன்புக்காகவே ஒரு நாள் வாய்க்கிறது. இந்த நவீன சிறைக்கூடத்தை விட்டு பறந்து போக வேண்டும் என அன்பு ஆசைப்பட்டது கை கூடுகிறது. அந்த Road Trip வேறொரு பிரச்னையை கொண்டு வர அங்கிருந்து தொடர்ச்சியாக அன்பு செய்யும் அட்ராசிட்டி தான் " பறந்து போ" திரைப்படத்தின் ஒன்லைனர்.
சிவாவின் Transition :
அகில உலக சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்துடன் தமிழ் சினிமாவின் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென தனி இடத்தையும், ரசிகர்களையும் வைத்திருப்பவர் நடிகர் சிவா. ஒரு கட்டத்தில் நடிகர் சிவா திரையில் தோன்றினாலே சிரிப்பு வந்துவிடும் என்கிற நிலை உள்ளது. ஆனால் சிவாவின் வேறோரு நடிப்பின் கோணத்தை இயக்குநர் ராம் இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். மகனை அடித்து விட்டு வருந்தி அவனுக்காக நூடுல்ஸ் செய்து தருவதும், அன்பு திடீரென அழும்போது அவனுக்கு சேமியா ஐஸ் வாங்கித் தந்து தேற்றுவதிலும் ஒரு தேர்ந்த எமோஷனலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவா.
அன்பு.., குளோரி - Bond 🫂
தமிழ் சமூகத்தில் தாயுக்கும் மகனுக்குமான இணைப்பு என்பது இயல்பான ஒன்று. அன்பை முழுவதுமாக புரிந்து கொள்ளும் அம்மாவாக தனது நடிப்பையும், உணர்வுகளையும் படம் முழுக்க காட்டியிருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. மகனின் தூரம், குடும்பத்தின் பொறுப்பு, தனது சகோதரி மற்றும் குடும்பத்தை மிஸ் பண்ணும் காட்சி, கிளைமாக்ஸில் வரும் காமெடி ரகளை என மிக கச்சிதமாக நடித்திருக்கிறார் கிரேஸ். அன்பாக வரும் மிதுல் ரயான் தனது சுட்டித் தனங்களால் யார்ரா அந்த பையன்...? நான் அந்த பையன் எனும் ரேஞ்சுக்கு பட முழுக்க ஒரு பட்டாம்பூச்சிக்கு நிகராய் பறந்து கொண்டே இருக்கிறான். குளோரி - அன்புவின் பிணைப்பு திரையில் ஒரு ஃபீல் குட்டை தருகிறது.
ராமின் கதாபாத்திர தேர்வும்.., பெயர்களும் :
குளோரியின் சேலைக் கடையில் வேலை பார்க்கும் மைனா, அவரது காதலன் குருவி, சீலக்காரம்மா.. கட்டுப்பிடியாகாதாக்கும் .. என முகச் சுருக்கங்கள் உடன் இருக்கும் பாட்டி, என் பெயர் காக்ரோச் எனச் சொல்லும் குட்டிக் குழந்தை, அன்புவின் அழகிய ஜென்னா, கிளி பிடிக்க மரம் ஏறும் சிறுவனான தர்மா தி கிரேட், குண சேகராக வரும் அஜுவர்கீஸ், , கோகுலின் தந்தையாக வரும் பாலாஜி சக்திவேல், ஜென்னாவின் தந்தையாக வரும் விஜய் யேசுதாஸ் என தங்கள் பங்கிற்கு அனைவரும் கதைக்களத்தை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள்.
ஆனந்தி To வனிதா - ராமின் அஞ்சலி
கற்றது தமிழில் தொடங்கி பறந்து போ வரை இடையில் தங்க மீன்களை தவிர இயக்குநர் ராமின் அனைத்து படங்களிலும் இருக்கிறார் நடிகை அஞ்சலி. நெஜமா தான் சொல்றியா .. என ஆரம்பித்த அஞ்சலி வானதியாக அதே துள்ளலான நடிப்புடனும் குறும்புடனும் திரையில் தோன்றி மனதில் நிற்கிறார். சிறு வயது காதலியான அஞ்சலி (Crush) குளத்துக் கரையில் அமர்ந்து கொண்டே நீங்க கோகுல்தானே எனக் கேட்பதும், இதுதான் என் பையன் அன்பு என சிவா சொல்வதும் இயல்பாகவும், கூடுதல் அழகோடும் இருக்கிறது. மகனை பின் தொடர்ந்து குளத்து கரைக்கு சிவா செல்லும் போது பொம்பளைங்க குளிக்கிற கரைக்கு ஏன் வர்ரீங்க என அக்காட்சியை ஒரு நகைச்சுவை காட்சியாக கூட வைத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் ராம் அப்படி செய்யாமல் இயல்பாக இருவரும் பேசிக் கொள்ளும் காட்சிகளாக எடுத்திருப்பது அழுத்தமான நட்பை பேசுகின்றன. ஆனந்தி, விஜி , சௌமியா தற்போது வனிதா என திரையில் வரும் ராமின் அஞ்சலி பேரழகு.
ராமின் உலகத்தில் மனிதர்கள் :
மழைக்கு ஒதுங்க போன இடத்தில் அறிமுகமாகும் Emperor ஆக வரும் தாத்தா, பணப்பெட்டியை திருடிவிட்டதாக பயந்து போய் கடைக்கு திரும்பும் போது வியாபாரம் செய்து கொண்டிருக்கும் மைனா, காட்டுக்குள் அன்பை தேடுவதற்காக போகும் முன் பைக்கை பார்த்துக்கங்க அண்ணா என சொல்லிக் விட்டுச் செல்லும் டீக்கடை அண்ணா, பேத்திக்காக சேலை விலையை பேரம் பேசும் பாட்டி, பாட்டிக்காக 4000 கொடுத்து சேலை வாங்க அம்மாவிடம் அடம் பிடிக்கும் குட்டிச் சிறுமி, வாத்து மேய்ப்பர் என இயக்குநர் ராமின் உலகத்தில் உள்ள மனிதர்கள் பேரன்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
இயக்குநர் ராமின் திரைமொழி :
முதல் காட்சியான நகரத்தின் ட்ரோன் காட்சியில் தொடங்கி, கடைசி காட்சியான மலை, கிராமம், மரங்கள் என விரிவது வரை அத்தனையும் அழகு. சிவா - மிதுல் ரயான் - பாலாஜி சக்திவேல் ஆகிய 3 பேரும் பேசிக் கொள்ளும் ஒரு காட்சி உண்டு. அதில் பாலாஜி சக்திவேல் அல் ஜசீரா ஊடகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஃபாலஸ்தீனத்தின் காசா மீது தாக்குதல்கள் குறித்த செய்தித் தொகுப்பை பார்த்துக் கொண்டிருப்பார். It is more Intense. தனது இயலாமை, கனவு, பிரச்னை என அனைத்தையும் வலிய மறந்து போக அழுது கொண்டே கிரேஸ் ஆடும் டான்ஸ், தனது மகனுக்காக சிவா ஆடும் டான்ஸ் என படம் முழுக்க சிரிக்க மட்டுமல்ல எமோஷனாகவும் திரைப்படம் நகர்கிறது.
இசை..ஒளிப்பதிவு.. :
திரைப்படத்தில் 19 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை படத்தின் நீளத்தை அதிகரிக்கவில்லை. மாறாக பின்னணி இசைக்கு பதிலாக இடம் பெற்றுள்ளது புதுமையான முயற்சி. சந்தோஷ் தயாநிதியின் இசை, யுவன் மற்றும் ஆண்ட்ரியாவின் குரலில் பாடல்கள் பொருந்தி போகின்றன. நகரம், கிராமம், வீடு, குளம், மலை, காடு, ரயில் தண்டவாளம், குரங்கு என ஒரு Landscape Transition ஐ அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஏகாம்பரம்.
ராமின் குரல் :
“குழந்தைகள் கோபித்துக் கொண்டு மலை ஏறுவதும், பெற்றோர்கள் அவர்களைத் துரத்த முடியாமல் மூச்சுவாங்கிக் கொண்டு முட்டிவலியோடு நிற்பதும் என இவை எதுவும் புதுக்கதை அல்ல. திருவிளையாடல் காலம் தொட்டு இருக்கிற கதைதான். மார்ஸ்க்கே போனாலும் மாறாத கதைதான்.
குழந்தைகள் கேட்பவை எத்தனை நியாயமானது என்றாலும் பெற்றோர்களால் - அவை அனைத்தையும் செய்து விட முடியாது. தங்களால் இயன்றதை இயன்ற அளவு செய்வதற்கு போராடுவதே பெற்றோர்களின் வாழ்க்கையாய் இருக்கிறது.
ஆக என்னதான் செய்ய இயலும்? நேரம் கிடைக்கையில் நம்மை பிய்த்துத் தின்னும் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு குடும்பத்தோடு கொஞ்சம் மலை ஏறுவோம். குளத்தில் நீந்துவோம். மூச்சிரைக்க ஓடுவோம். சூரியோதயம் பார்ப்போம். பறந்து போவோம்” என இயக்குநர் ராம் திரைமொழியில் மட்டுமல்ல குரலிலும் பேசியிருக்கிறார்
மொத்தத்தில் ராமின் பறந்து போ.. குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு பறந்து போகும் ஒரு விமான பயணத்தின் குதூகலத்தை தரும்.
- ச. அகமது, நியூஸ் 7 தமிழ்