Letter Pad-ல் அதிரடி மாற்றம்... அன்புமணி பெயரை நீக்கினார் ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இடையே சமீப நாட்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன்படி, மூச்சு இருக்கும்வரை நான்தான் கட்சியின் தலைவர் என அண்மையில் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அன்புமணி ராமதாசுக்கு தலைவர் பதவியை கொடுக்க மாட்டேன் எனவும் கூறி வருகிறார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் பாமக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எம்எல்ஏ அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ராமதாஸ் நிர்வாகிகள் நியமனம் கடிதத்தை வெளியிட்டார். முன்னதாக இதில் நகல் என்ற இடத்தில் அன்புமணி ராமதாஸ் பெயர் இருக்கும். ஆனால், இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.