For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு - மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கிறது. துணை குடியரசுத் தலைவராக சுதர்சன ரெட்டி வந்தால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
04:05 PM Aug 26, 2025 IST | Web Editor
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்கிறது. துணை குடியரசுத் தலைவராக சுதர்சன ரெட்டி வந்தால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என நெல்லையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு   மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்
Advertisement

Advertisement

நெல்லை, பாளையங்கோட்டையில் நடைபெற்ற காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வில் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்துப் பேசினார்.

தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.

நெல்லையில் நடைபெற்ற நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவைத் தலைவர் மாணவர்களுக்குத் தனது கைகளால் உணவூட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாவட்டத்தில் 210 பள்ளிகளில் 13,115 மாணவர்கள் புதிதாக இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 804 பள்ளிகளில் 34,277 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்திற்காக தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு மறுத்துவிட்டது என்று அப்பாவு குற்றம் சாட்டினார். இது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்பதை காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் 'விண்வெளியில் கால் வைத்த முதல் மனிதர் அனுமன்' என்று கூறியதற்குப் பதிலளித்த அப்பாவு, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்கள் பிற்போக்குச் சிந்தனைகளைத்தான் பரப்புவார்கள் என்று குறிப்பிட்டார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் திருவாரூரில் பல்கலைக்கழகம் அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டும் அது நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார். இது, தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் மத்திய அரசின் முயற்சி என்று தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன ரெட்டியை 'நக்சல் ஆதரவாளர்' என்று அமித் ஷா கூறியதற்கு அப்பாவு கண்டனம் தெரிவித்தார். சுதர்சன ரெட்டி மிகச் சிறந்த நீதிபதி என்றும், பல வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கியவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் பழைய வரலாற்றைப் பார்த்தால், அவர்கள் யார் என்று தெரியும் என்றும் அவர் கூறினார்.நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படவில்லை என்று அப்பாவு தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தில் நடந்த குளறுபடி குறித்து விவாதிக்கக் கூட மத்திய அரசு மறுப்பதாகவும், சுதர்சன ரெட்டி துணை குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றால் மட்டுமே நாடாளுமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பா.ஜ.க.வின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஒரு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர் என்பதால், அவரைத் தாங்கள் ஆதரிக்க முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் வெளியுறவுக் கொள்கைகள் படுதோல்வி அடைந்ததுதான் காரணம் என்று அப்பாவு விமர்சித்தார். இந்த நிகழ்வில் மேயர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement