சட்டமன்ற தேர்தல் | பீகாரில் 122 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு!
பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 121 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 3 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். அதில், 10 லட்சத்து 72 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்கள். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வந்தனர்.
வாக்குச்சாவடி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்தனர். இறுதியில் பீகாரில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் மொத்தமாக 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பீகார் சட்டப்பேரவை வரலாற்றில் இதுவே அதிகமாக பதிவான வாக்கு சதவீதம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தொடர்ந்து, பீகாரில் 122 தொகுதிகளில் நாளை (நவ.11) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
அங்கு மொத்தம் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 1,165 பேர் ஆண்கள், 136 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 1 கோடியே 95 லட்சம் பேர் ஆண்கள், 1 கோடியே 74 லட்சம்பேர் பெண்கள் ஆவர். இந்த தேர்தலுக்காக, மொத்தம் 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. தொடர்ந்து, வரும் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை தேர்தல் முடிவுகள் வெளியாகும்.