அசாம் சுரங்க விபத்து | 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள்!
அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜன.6ம் தேதி இந்த சுரங்கத்திற்குள் மழை வெள்ள நீர் புகுந்தது. அப்போது சுரங்கத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்களில் சிலர் தப்பி வெளியே வந்த நிலையில் 9 பேர் அதில் சிக்கிக்கொண்டனர்.
தப்பி வெளியே வந்தவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் போலீசாரிடம் சுரங்க விபத்து குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து, உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையின்ர தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஜன.8ம் தேதி சுரங்கத்தில் இருந்து தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜன.11ம் தேதி மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் இந்த சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 44 நாட்களுக்கு பிறகு சுரங்கத்திற்குள் சிக்கி இருந்த 5 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சுரங்கத்திற்குள் சிக்கிய 9 பேரும் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சுரங்கத்திற்குள் சிக்கிய அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.