“அசாம் முதல்வரின் செயல் இந்திய நீதி பயணத்திற்கு இலவச விளம்பரத்தையே கொடுக்கிறது!” - ராகுல் காந்தி
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா காங்கிரஸ்-ன் இந்திய நீதி பயணத்தை தடுத்து நிறுத்தி தங்களுக்கு இலவச விளம்பரம் தருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. மணிப்பூரை தொடர்ந்து அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமுக்கு ராகுல் காந்தி நடைபயணம் வந்த போது அவர் வந்த பஸ்சை சுற்றி வளைத்த பாஜ தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம், மோடி, என கோஷமிட்டனர். கைகளில் கம்புகளை வைத்திருந்த தொண்டர்கள் ஒற்றுமை யாத்திரைக்கு எதிராகவும் கூச்சலிட்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போராவை பாஜவினர் தாக்கினர். இதில், அவரது மூக்கு, வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ராகுல் காந்தி உடனே பஸ்சில் இருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள படாதிரவாதன் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்திக்குள் நுழைய முயன்றபோது ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி கவுகாத்தியின் பிரதான பகுதிகள் வழியாக யாத்திரையை மேற்கொள்ளாமல் பைபாஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பைபாஸ் சாலையில் செல்ல வேண்டும் என்று கூறி யாத்திரை தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே ராகுல் காந்தி யாத்திரை திட்டமிட்ட பாதையில் நடக்கவில்லை என்று அசாம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு நான் தான் உத்தரவிட்டேன் என்று அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த சர்மா தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
மக்களை தூண்டிவிட்டதற்காக ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்ய நான் தான் அறிவுறுத்தினேன். அசாம் மிகவும் அமைதியான மாநிலம். இதுபோன்ற நக்சலைட்டு யுக்திகள் எல்லாம் எங்கள் மாநிலத்துடன் சம்பந்தம் இல்லாதது. விதிமுறைகளை பின்பற்றி நடக்காததால் அசாமில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.
இது குகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:
நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர்களில் ஒருவர் ஹிமந்த பிஸ்வ சர்மா. இந்திய நீதி பயணத்திற்கு எதிரான இந்த அசாம் முதல்வரின் நடவடிக்கை உண்மையில் நமக்கு பயனுள்ளதாகவே உள்ளது. அவரின் செயல் நமது பயணத்திற்கு இலவச விளம்பரத்தையே தேடி தருகிறது. கோயிலுக்கும், கல்லூரிக்கும் செல்லும் நம்மை தடுத்து மிரட்டும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எப்போதும் அஞ்சபோவதில்லை. இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.
இதனை அடுத்து தற்போது அசாம் பயணத்தை முடித்துக் கொண்டு மேகலயாவில் தனது பயணத்தை தொடர்கிறார் ராகுல்காந்தி.