ஆசிய கோப்பை இறுதிப் போட்டி - 8வது முறையாக பட்டத்தை வெல்லுமா இந்தியா?
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட்டின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் 8வது முறையாக பட்டத்தை இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
9வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையின் தம்புல்லாவில் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றிருந்தன.
லீக் சுற்று, அரையிறுதி ஆகியவை நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன. ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 8முறையாக சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அதேவேளையில் இலங்கை அணியும் கடும் சவாலைத் தரும் என்பதால் கவனத்துடன் இந்திய வீராங்கனைகள் ஆட வேண்டியுள்ளது. இலங்கை அணியும் இந்த போட்டியில் இதுவரை தோல்வியே பெறாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இலங்கை தரப்பில் கேப்டன் சமரி அத்தபத்து, ருஷ்மி குணரத்னே, ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகின்றனர். இதேபோல இலங்கை தரப்பில் கவிஷா தில்ஹரி அபாரமாக பந்துவீசி வருகிறார்.
இந்திய அணியின் தொடக்க பேட்டர்களாக ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ஆகியோர் அதிரடியாக ஆடி அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர். பௌலிங்கில் ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் முத்திரை பதித்து வருகின்றனர். சுழற்பந்தில் ராதா யாதவ் பலம் சேர்க்கிறார். இறுதி போட்டி இன்று பிற்பகல் 3மணிக்கு இலங்கையின் டம்புல்லாவில் நடைபெற உள்ளது.