தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக்குழு – திமுகவிற்கு அசாதுதீன் ஒவைசி ஆதரவு!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வருகிற 22-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதலமைச்சர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாத் எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
"நமது ஜனநாயகத்தின் கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதிலும், தேசிய வளர்ச்சி இலக்குகளை நிலைநிறுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) உருவாக்கம் மற்றும் நியாயமான எல்லை நிர்ணய செயல்முறையைப் பெறுவதற்கான முயற்சிகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இது சம்பந்தமாக, JAC-யில் இணைய நான் முறையாக ஒப்புக்கொள்கிறேன். இருப்பினும், மறைந்த எனது தந்தையின் மறைவின் ஆண்டு நிறைவு மற்றும் அன்றைய தினம் முன்னரே திட்டமிடப்பட்ட கடமைகள் காரணமாக என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், இந்த நோக்கத்திற்காக எனது முழு ஆதரவையும் மீண்டும் கூறுகிறேன். மேலும் எனது சார்பாக எங்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் MLA இம்தியாஸ் ஜலீல் கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்த முயற்சியில் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும் JAC-யின் முயற்சிகளில் தொடர்ந்து நெருக்கமாக ஈடுபடுவேன்"
இவ்வாறு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.