"அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்" - நீதிமன்றம் அறிவிப்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது ஜூன் 5-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 10-ந்தேதி உயர்நீதிமன்றம் 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை வழங்கிய நீதிபதிகள், வருகிற ஜூன் 2-ந் தேதி சரணடைந்து மீண்டும் அவர் சிறை செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நிதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அமலாக்கத்துறை வாதிடுகையில் கூறியதாவது :
"செய்தியாளர் சந்திப்பின் போது அமலாக்கத்துறை விசாரணை குறித்து தவறான கருத்துகளை கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது ஜாமீன் நிபந்தனைகளுக்கு எதிரானது. அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று கூறியது.
இதையும் படியுங்கள் : ‘கருடன்’ படம் பார்க்க அனுமதி மறுப்பு! அரசு வாகனத்தில் அழைத்து சென்ற வட்டாட்சியர்!
நீங்கள் மீண்டும் சரண் அடையப் போகிறீர்களா? என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது: எனக்கு எந்த நிவாரணமும் நீதிமன்றம் வழங்கவில்லை என்றால், வேறு எந்த வாய்ப்பும் இல்லை. சரணடைவேன்" என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை வரும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சரண்டைய வேண்டும் என நிதிபதி உத்தரவிட்டார்.