அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு - உச்சநீதிமன்றத்தில் ஏப்.15ம் தேதி விசாரணை?
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
இதையும் படியுங்கள் : “இபிஎஸ்-ன் பாதகச் செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்... மன்னிக்கவும் மாட்டார்கள்...” - திமுக கடும் சாடல்!
இதற்கிடையில் 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர். தொடர்ந்து கெஜ்ரிவால், மார்ச் 22-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால், தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. கைது நடவடிக்கையில் சட்டவிதிகள் ஏதும் மீறப்படவில்லை என்றும் தெரிவித்த நீதிமன்றம், ஆதாரங்களின் அடிப்படையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறியது.
இதனைத் தொடர்ந்து, கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவைக் கையாளவில்லை என்றும், சில காரணங்களுக்காக தாம் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த ரிட் மனுவை மட்டுமே கையாளுவதாகவும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வரும் 15 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனத் தெரிகிறது.