"அமலாக்கத் துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாயைக் கூட கைப்பற்றவில்லை" - அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி பேட்டி!
அமலாக்கத்துறை 250 முறை ரெய்டு நடத்தியும் ஒரு ரூபாய்யைக் கூட கைப்பற்றவில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக, அவரது வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அவரை கைது செய்தனர். இதனை அடுத்து டெல்லி மாநில ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ!!
அப்போது ஏழு நாள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வருகிற 28 அம் தேதி வரை அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி, அன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை (23.03.2024) டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அமலாக்கத்துறை கைது செய்தது. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்தது சட்டவிரோதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்றம் கெஜ்ரிவாலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். மேலும், ஜெயிலில் இருந்து ஆட்சி நடத்த உள்ளதாகவும், விரைவில் விடுதலையாகி டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், அவரை அமலாக்க இயக்குனரகத்தின் (ED) அலுவலகத்தில் நேற்று ( 26.03.2024 ) சந்தித்தார். அதன் பின் செய்தியளார்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது ;
"மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை 250 முறை ரெய்டு நடத்தியது. ஆனால் ஒரு ரூபாய் கூட இதுவரை கைப்பற்றவில்லை . இரண்டு நாட்களுக்கு முன் சிறையில் இருந்தவாறே நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு டெல்லியில் குடிநீர் பிரச்னையால் மக்களுக்கு தேவையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். டெல்லி மக்கள் மீதான அக்கறை மட்டுமே இதற்கான காரணம். மக்களின் நன்மைக்காக போராடும் அவர் மீது மத்திய அரசு வழக்கு பதிவு செய்தது. டெல்லியை அழிக்க நினைக்கிறார்களா? மக்கள் தொடர்ந்து துன்பப்படுவதை அவர்கள் விரும்புகிறார்களா?" அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அப்போது மதுபான ஊழல் பற்றிய முழுமையான தகவலை கூறுவார்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்.