அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.
டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை 6 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் 6 முறையும் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.