"பிரபலங்களுக்கே பாதுகாப்பு இல்லை, சாமானியர்களின் நிலை என்ன?’ - அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மும்பையில் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த சூழலில், சைஃப் அலிகான் இன்று அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து தற்போது அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் பாலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதை தொடர்ந்து தற்போது அரசியலிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது,
“சைஃப் அலிகானை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதுகாப்பான இடத்தில் வசிக்கும் பெரிய நடிகராக இருக்கும் அவருக்கு இப்படி நடந்திருப்பது கவலையளிக்கிறது. இதற்கு முன்பு பாபா சித்திக் கொல்லப்பட்டது, சல்மான் கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் மீது பாதுகாப்பு குறித்த கேள்வி எழும்பியுள்ளது.
பிரபலங்களுக்கே அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாமல் நிலையிருக்கும் நிலையில், சாமானியர்களின் நிலை என்ன? ஒவ்வொரு நாளும் அரசாங்கம் இந்திய - வங்க தேச எல்லையை பாதுகாக்க முடியவில்லை என சொல்கிறார்கள். முடியவில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள். இப்படிப்பட்ட அரசாங்கம் மக்களுக்கு நல்லாட்சியையும் பாதுகாப்பையும் வழங்க முடியாது”
இவ்வாறு டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.