அயோத்தி கோயிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ்...யார் இவர்?
அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கான சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த மூலவர் குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. யார் இந்த அருண் யோகிராஜ்?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த குழந்தை ராமர் சிலையை வடிவமைக்க அறக்கட்டளை சார்பில் பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரை சேர்ந்த அருண்யோகிராஜ், ஜெய்ப்பூரை சேர்ந்த சத்யா நாராயண பாண்டே ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் கடந்த ஜூன் மாதம் முதல் சிலை வடிவமைக்கும் பணியை தொடங்கினர். அதற்கான கற்களும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
கர்ப்ப கிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி விரைவில் நடைபெற உள்ளது. மேலும் தற்போது சிற்ப வேலைபாடுகள் முடிவடைந்த நிலையில், மூவரில் யாருடைய சிற்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்று வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் ராமரின் குழந்தைப் பருவம், குறும்புத்தனம், கம்பீரம் என அனைத்து பாவனைகளையும் உள்ளடக்கிய மைசூரை சேர்ந்த அருண்யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜின் குடும்பம் ஐந்து தலைமுறையாக சிற்ப வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அருண் யோகிராஜ்?
- நாட்டின் முன்னணி சிற்பிகளில் ஒருவரான அருண் யோகிராஜ், இளமையிலேயே தனது தந்தை யோகிராஜ் மற்றும் தாத்தா பசவண்ணா சில்பி ஆகியோரின் தாக்கத்தால், சிற்பக்கலை உலகிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார். யோகிராஜ் மற்றும் பசவண்ணா ஆகியோர் மைசூர் மன்னரின் ஆஸ்தான சிற்பியாக இருந்தவர்கள்.
- எம்பிஏ படித்து, கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்த போதிலும், சிற்பக்கலை மீதான தீராத காதல், 2008-ல் மீண்டும் அருணை சிற்ப உலகிற்கு இழுத்து வந்தது.
- அப்போதிருந்து, அவரது கலைத்திறன் செழித்து, நாடு தழுவிய அங்கீகாரத்தைப் பெற்ற சின்னமான சிற்பங்களை உருவாக்க வழிவகுத்தது.
- டெல்லி இந்தியா கேட் அருகே அமர் ஜவான் ஜோதிக்குப் பின்னால் உள்ள சுபாஷ் சந்திர போஸின் 30 அடி சிலை உட்பட பல்வேறு முக்கிய சிலைகளை அருண் வடிவமைத்துள்ளார்.
- கேதார்நாத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிற்பம் முதல் மைசூரில் உள்ள 21 அடி உயர அனுமன் சிலை ஆகியவையும் அருணின் பங்களிப்புகளில் அடங்கும்.