தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.