தக் லைஃப் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்?..
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. கமல்ஹாசன் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதையொட்டி கமல்ஹாசன் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இந்நிலையில், செர்பியாவில் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வௌியாகி வைரலாகின.
இந்தபடத்தில் நடிகர் கமல்ஹாசன் தற்காப்பு கலைதிறன்களை வெளிப்படுத்துகிறார், பழங்கால வரலாற்று ஆயுதங்களுடன் எதிரிகளுடன் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அதிர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய உள்ளன. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து கடந்த மாதம் விலகினார். அதை தொடர்ந்து தற்போது, நடிகர் ஜெயம் ரவியும் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகின.
இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது குறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.